திருக்குறளுக்கு பரிமேலழகர் உரை கூறும் பல இடங்களில் நம்மாழ்வாரின் திருவாய்மொழியையே மேற்கோள் காட்டுகிறார்.
ஒரு மன்னவனின் மாட்சியையும், வல்லமையையும் விளக்கும் அதிகாரத்துக்கு, “இறைமாட்சி” என்று பெயர் வைத்திருந்தார் வள்ளுவர். இறைவன் என்ற சொல் ஆதியும் அந்தமும் இல்லாமல் மூல பரம் பொருளாக இருக்கும் அந்த பகவானையே குறிக்கும். அப்படி இருக்கும் போது கேவலம், இந்த உலகில் பிறந்து இறக்கும் ஒரு மனிதனான அரசனை குறிக்க அந்த உயர்ந்த சொல்லை பயன்படுத்தலாமா? என்று பரிமேலழகரை பலர் கேட்டனர். அவர் புன்னகைத்த படியே திருவாய்மொழியின் ஒரு பாசுரத்தை காட்டி பின் வருமாறு உரை பகன்றார்.
பரிமேலழகரின் அதிகார முன்னுரை:
அஃதாவது, அவன்தன் நற்குண நற்செய்கைகள். உலகபாலர் உருவாய் நின்று உலகம் காத்தலின், 'இறை` என்றார். "திருவுடை மன்னரைக்காணில் திருமாலைக்கண்டேனே யென்னும்" (திருவாய்மொழி, பதிகம் 34: பாசுரம். 08) என்று பெரியாரும் பணித்தார்.
“ திருவாய்மொழியின் 34- 8 ஆம் பாசுரத்தில் நம்மாழ்வார், “திருவுடை மன்னரை காணின் திருமாலை கண்டேனே” என்று சொல்லுகிறார். பல விதமான செல்வங்களைப் பெற்று அரசனாக வாழ்பவனை காணும் போது எல்லாம், எல்லா செல்வங்களுக்கும் இருப்பிடமாக இருக்கும் திருமகளை மணந்த மாயவனையே அங்கு அவர் காண்பதாக சொல்லுகிறார்.
அதனால், நாட்டை காக்கும் அரசனை இவ்வுலகைக் காக்கும் இறைவனோடு ஒப்பிடுவதில் என்ன தவறு இருக்கிறது” என்று பரிமேலழகர் கேட்டார்.
349 ஆவது குறளை, பார்ப்போம்.
“பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும்.”
பரிமேலழகர் உரை
பற்று அற்ற கண்ணே பிறப்பு அறுக்கும் - ஒருவன் இருவகைப்பற்றும் அற்ற பொழுதே அப்பற்று அறுதி அவன் பிறப்பை அறுக்கும்; மற்று நிலையாமை காணப்படும் - அவை அறாதபொழுது அவற்றால் பிறந்து இறந்து வருகின்ற நிலையாமை காணப்படும். (காரணமாகிய பொழுதே காரியமும் அற்றதாம் முறைமைபற்றி, 'பற்றற்ற கண்ணே' என்றார். ' அற்றது பற்றெனில், உற்றது வீடு' (திருவாய் 1-2-5)என்பதூஉம் அது பற்றி வந்தது. இவை இரண்டு பாட்டானும்அவ்விருமையும் ஒருங்கு கூறப்பட்டன.).
திருவாய்மொழியைக் காண்போமா:
“ அற்றது பற்று எனில் உற்றது வீடு உயிர்
செற்றது மன்னுறில் அற்று இறை பற்றே”
குறள் 370
ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்
[அறத்துப்பால், துறவறவியல், அவாவறுத்தல்]
பரிமேலழகர் உரை:
ஆரா இயற்கை அவா நீப்பின் - ஒருகாலும் நிரம்பாத இயல்பினையுடைய அவாவினை ஒருவன் நீக்குமாயின், அந்நிலையே பேரா இயற்கை தரும் - அந்நீப்பு அவனுக்கு அப்பொழுதே எஞ்ஞான்றும் ஒரு நிலைமையனாம் இயல்பைக் கொடுக்கும். (நிரம்பாமையாவது: தாமேயன்றித் தம்பயனும் நிலையாமையின் வேண்டாதனவாய பொருள்களை வேண்டி மேன் மேல் வளர்தல். அவ்வளர்ச்சிக்கு அளவின்மையின், நீத்தலே தக்கது என்பது கருத்து. களிப்புக்கு கவற்சிகளும் பிறப்புப் பிணிமூப்பு இறப்புக்களும் முதலாயின இன்றி, உயிர் நிரதிசய இன்பத்தாய் நிற்றலின் வீட்டினை 'பேரா இயற்கை' என்றும், அஃது அவாநீத்த வழிப்பெறுதல் ஒரு தலையாகலின், 'அந்நிலையே தரும்' என்றும் கூறினார். ஒன்றாய்க் கிடந்த அரும்பெரும்பாழ் உலப்பிலதனை உணர்ந்துணர்ந்து, சென்றாங்கு இன்பத்துன்பங்கள் செற்றுக்களைந்து பசையற்றால், அன்றே அப்போதே வீடும் அதுவே வீடு வீடாமே. (திருவாய் 78-6)என்பதும் இக்கருத்தே பற்றி வந்தது. இந்நிலைமை உடையவனை வடநூலார் 'சீவன் முத்தன்' என்ப. இதனால் வீடாவது இது என்பதூஉம், அஃது அவா அறுத்தார்க்கு அப்பொழுதே உளதாம் என்பதூஉம் கூறப்பட்டன.).
திருவாய்மொழி இவ்வாறு கூறுகிறது “ஒன்றாய்க் கிடந்த அரும்பெரும்பாழ் உலப்பிலதனை உணர்ந்துணர்ந்து, சென்றாங்கு இன்பத்துன்பங்கள் செற்றுக்களைந்து பசையற்றால், அன்றே அப்போதே வீடும் அதுவே வீடு வீடாமே. (திருவாய் 78-6)”.
குறள் 610
மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு
[பொருட்பால், அரசியல், மடியின்மை]
பரிமேலழகர் உரை
அடி அளந்தான் தா அயது எல்லாம் - தன் அடியளவானே எல்லா உலகையும் அளந்த இறைவன் கடந்த பரப்பு முழுதையும்; மடி இலா மன்னவன் ஒருங்கு எய்தும் - மடியிலாத அரசன் முறையானன்றி ஒருங்கே எய்தும்.
('அடியளந்தான்' என்றது வாளா பெயராய் நின்றது. 'தாவியது' என்பது இடைக் குறைந்து நின்றது. எப்பொழுதும் வினையின் கண்ணே முயறலின், இடையீடின்றி எய்தும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் மடியிலாதான் எய்தும் பயன் கூறப்பட்டது.).
குறள் 1103
தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு.
[காமத்துப்பால், களவியல், புணர்ச்சிமகிழ்தல்]
பரிமேலழகர் உரை
'நிரதிசய இன்பத்திற்குரிய நீ இச்சிற்றின்பத்திற்கு இன்னையாதல் தகாது' என்ற பாங்கற்குத் தலைவன் சொல்லியது தாம் வீழ்வார் மென்தோள் துயிலின் இனிது கொல் - ஐம்புலன்களையும் நுகர்வார்க்குத் தாம் விரும்பும் மகளிர் மெல்லிய தோளின்கண் துயிலும் துயில் போல வருந்தாமல் எய்தலாமோ; தாமரைக் கண்ணான் உலகு - அவற்றைத் துறந்த தவயோகிகள் எய்தும் செங்கண்மால் உலகம்.
விளக்கம் (ஐம்புலன்களையும் நுகர்வார் என்னும் பெயர் அவாய் நிலையான் வந்தது. 'இப் பெற்றித்தாய துயிலை விட்டுத் தவயோகங்களான் வருந்த வேண்டுதலின், எம்மனோர்க்கு ஆகாது' என்னும் கருத்தால், 'இனிது கொல்' என்றான். இந்திரன் உலகு என்று உரைப்பாரும் உளர். தாமரைக்கண்ணான் என்பது அவனுக்குப் பெயரன்மையின், அஃது உரையன்மையறிக.)
குறள் 617
மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளான் தாமரையி னாள்.
[பொருட்பால், அரசியல், ஆள்வினையுடைமை]
பரிமேலழகர் உரை
மா முகடி மடி உளாள் - கரிய சேட்டை ஒருவன் மடியின் கண்ணே உறையும்; தாமரையினாள் மடிஇலான் தாள் உளாள் என்ப - திருமகள் மடியிலாதானது முயற்சிக்கண்ணே உறையும் என்று சொல்லுவர் அறிந்தோர். (பாவத்தின் கருமை அதன் பயனாய முகடிமேல் ஏற்றப்பட்டது. மடியும் முயற்சியும் உடையார்மாட்டு நிலையை அவைதம்மேல் வைத்துக் கூறினார். இவை இரண்டு பாட்டானும் அவ்விருமைக்கும் ஏது கூறப்பட்டது.).
பரிமேலழகர் காஞ்சி உலகளந்த பெருமாள் கோவில் வைணவபட்டர் பரம்பரையைச் சேர்ந்தவர். காஞ்சி வரதராஜ பெருமாள்(பேரருளாளன்) கோவிலில் உள்ள கல்வெட்டு இவரை பரிமேலழகிய பெருமான் தாதர் எனக் குறிப்பிடுகிறது.
பாலெல்லாம் நல்லாவின் பாலாமோ பாரிலுள்ள நூலெல்லாம் வள்ளுவர் செய் நூலாமோ - நூலிற் பரித்த உரையெல்லாம் பரிமே லழகன் தெரித்தவுரை யாமோ தெளி"
என்று தொண்டை மண்டல சதகம் பரிமேலழகரின் பெருமை கூறுகின்றது.
இவர் திருக்குறளுக்கும் ,மாயோனைப் பாடிய பரிபாடலுக்கும் விருத்தி உரை செய்துள்ளார்.
(திருமுருகாற்றுப்படைக்கு எழுதிய பரிமேலழகர் வேறு ஒருவர் என்பது பொதுவான கருத்து)
இவர் தனது உரையில் மேற்கோள் காட்டிய நூல் தொகுப்பு இவரது பன்மொழிப் புலமையை பறைசாற்றுகின்றது..
(அகநானூறு, புறநானூறு,கலித்தொகை,நற்றிணை,குறுந்தொகை,பட்டினப்பாலை,,பரிபாடல்,நெடுநல்வாடைபதிற்றுப்பத்து,பொருநராற்றுப்படை என்ற
சங்ககால இலக்கிய நூல்களும், சீவகசிந்தாமணி,சிலப்பதிகாரம்,மணிமேகலை,,வளையாபதி,
மகாபாரதம் முதலிய நூல்களும்,திருவாய்மொழி,திருக்கோவையார்,நாலடியார்,நான்மணிக்கடிகை, பழமொழி நானூறு, திரிகடுகம்,ராமாயணம்,பெரியபுராணம், தொல்காப்பியம்,இறையனார் அகப்பொருள்,புறப்பொருள் வெண்பாமாலை,
முத்தொள்ளாயிரம், மற்றும் கணித / கணக்கியல் நூலான ஏரம்பம் ஆகியவை மேற்கோள் காட்டப்பெறுகின்றன).வைணவப்பெரியாரான பரிமேலழகர் ஏன் திருக்குறளக்கும்,பரிபாடலுக்கும் உரை எழுதினார்?